சிவலிங்கம் பற்றி சித்தர்கள் கூறும் உண்மையான அர்த்தம் என்ன?
![]() |
சிவலிங்கம் |
வணக்கம், உங்கள் அனைவரையும் அன்போடு, ஆத்ம பரிவோடும் வரவேற்கிறோம்.
குறிப்பு:
இந்தப் பதிவு புரிந்துகொள்வதற்குச் சற்று சிரமமாக இருக்கும் அதனால் சற்று ஆழ்ந்து படிக்கவும் நன்றி.
கடவுளுக்கு ஏதேதோ வடிவங்கள் கொடுத்திருக்கிறார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள், பிறை வடிவம் உண்டு, சிலுவை வடிவம் உண்டு, சுவஸ்டி வடிவம் உண்டு. சிவனுக்கு மட்டும் ஏன் லிங்கமும் ஆவுடையுமான ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள், அதைதான் நம் எல்லோரும் வணங்குகிறோம்.
லிங்கத்திற்கு மனித உருவமோ அல்லது வேறு எந்த உருவமோ இல்லையே, சிவனுக்கு இப்படியொரு வடிவம் கொடுத்ததற்குச் சித்தர்கள் எதாவது சூட்சமம் கூறியிருக்கிறார்களா?
இது ஒரு நல்ல அருமையான கேள்வி இது பெரிய ஆராய்ச்சிக்குரிய ஒரு கேள்வி, இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் நிறைய விதமான வியாக்கியானங்கள் கூறியிருக்கிறார்கள்.
![]() |
சிவலிங்கம் |
இதற்கு எல்லாரும் பொதுவாகச் சொல்லும் ஒரு வியாக்கியானம் என்னவென்றால் "ஆண்குறி பெண்குறி" என்பதனுடைய நிலைப்பாடு தான் இது என்று எல்லாரும் பொதுவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த லிங்கத்திற்கும் ஆவுடைக்கும் நமது பாட்டனார்களான சித்தர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் எனப் பார்த்தால் சித்தர்களே மிக அருமையான வியாக்கியானம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் முதல் முதலில் இருந்தது சிவம்(ஆதி) தான் இதை அவர் சிவன் எனக் கூறுகிறார்.
திருமூலர் அவரது பாடலில் இதுபற்றிக் கூறியுள்ளார்கள் திருமந்திரத்தில் 106வது பாடலும் அதன் சித்தர்கள் கூறிய உண்மையான விளக்கத்தைக் காண்போம்.
![]() |
சிவலிங்கம் |
சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.
திருமந்திரம் பாடல் எண்: 106.
பாடலின் விளக்கம்:
இந்த நான்கே வரியில் அந்தக் கடவுளையும் சொல்லிவிட்டார், அதற்கான உருவம் எப்படி இருக்கும் என்பதையும் கூறிவிட்டார் திருமூலர். இந்தப் பாடலைச் சாதாரணமாகப் பார்த்தால் நமக்கு ஏதும் புரியாது, அனைத்தும் மறைபொருளாக உள்ளது.
"சிவம் (ஆதி) தான் முதல்" அந்த முதல் என்பது எப்படி ஆனது என்றால் "மூவர்(மூவரோடு)" அகாரம், உகாரம், மகாரம் இவைகள் மூன்று.
"மூவரோடு ஐவர்" மூவரோடு சேர்ந்து ஐவர் யார் என்றால் அகாரம், உகாரம், மகாரம், நாத, விந்து ஆக இதைத்தான் ஐவர் என்கிறார் திருமூலர்.
இந்தப் பிரபஞ்சம் எப்படி உற்பத்தியானது என்றால் சிவம்(ஆதி) கடவுள் தன்னைத்தானே படைத்துக்கொள்ளும்போது "அகார, உகார, மகார இவை மூன்று இதோடு சேர்ந்து நாத, விந்து" இவைகள் மொத்தம் ஐந்து அதாவது ஐவர் நாம் சொல்லும் "ந ம சி வ ய" என்பதும் இதைத்தான்.
![]() |
சிவலிங்கம் |
அகாரம், உகாரம், மகாரம், நாத, விந்து பன்னிரெண்டானது, நமக்குள் இருக்கும் ஆறு ஆதாரமாகவும் பிறகு நிராதாரமாக ஆறும் மொத்தம் 12 ஆனது, இது ஒன்றோடொன்று சேர்ந்து பிணைந்திருக்கிறது தனித்தனியாக இல்லை.
ஒன்றாக இருந்த கடவுள் "சிவன் முதல்" அகார, மகார, உகார + நாத, விந்து "மூவரோடு ஐவர்" லிருந்து 12 ஆன இந்தப் பிரபஞ்சத்தில் "அவைமுதல்" எல்லாவற்றுக்கும், இவை எல்லாவற்றையும் சேர்ந்து "விந்துவும் நாதமும் ஓங்கச்" "விந்துவும் நாதமும்" ஓங்கி நிற்கிறது.
அப்பொழுது விந்துவும் நாதத்தையும் "சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே" அகார, உகார, மகார, நாத, விந்து இவைகளை நாம் கண்களில் காண முடியாது, ஆனால் இதைச் சபைக்கு முன் எப்படி காண்பிப்பது? அதை விந்துவும் நாதமுமாய் தான் காண்பிக்க முடியும்.
![]() |
சிவலிங்கம் |
விந்து நாதம் ஆண்குறி, பெண்குறி மட்டும் அல்ல, விந்து, நாதம் என்பது நேர்மறை சக்தி துகள்கள், எதிர்மறை சக்தி துகள்கள்
ஆக இந்த விந்துவும் நாதமுமாகத்தான் Negative & Positive இந்தப் பிரபஞ்சமே இயங்கி கொண்டிருக்கிறது, இந்த Negative & Positive இல்லையென்றால் இந்த உலகத்தில் இயக்கமே இருக்காது. இன்னும் சொல்லுவதென்றால் "ஒடுக்கமும் வேண்டும் விரிவும் வேண்டும்". ஆக இந்த விந்து நாதத்தின் குறியீடாகத்தான் சங்கரனை வெளியில் காண்பித்திருக்கிறார்கள்.
விந்துவும் நாதமும் என்றால் ஆண் பெண் தானே என்பதும் மறுக்க முடியாது தான், இது "சக்தி, சிவம்" சரி அப்படியானால் இந்த விந்துவை எப்படி குறியீடாக வெளிப்படுத்ததினார்கள்?
![]() |
சிவலிங்கம் |
விந்துவை வட்டமாகக் குறியீடாகக் காண்பிக்கிறார்கள்,
அதெப்படி விந்துவை வட்டமாகக் குறியீடாகக் காட்டுகிறார்கள்?
ஆண் குறியை முப்பரிமாணமாகப் பார்த்தால் அது "CYLINDRICAL", அதை இரண்டாம் (2D) பரிமாணமாகப் பார்த்தால் அது வட்டமாகத்தான் இருக்கும். ஆக விந்துவின் குறியீடை வட்டமாக ஆவுடையாகக் காண்பிக்கப்படுகிறது.
நாதம் என்பது பெண்குறியுனுடைய வாய் வட்டம் அல்ல அது நீள் வட்டம் "ELLIPSE". ஆக நாதத்தை நீள் வட்டமாக லிங்கமாக குறியீ்டிட்டு காட்டியுள்ளார்கள்.
இந்த விந்துவும் நாதமுமாகத்தான் இந்தச் சங்கரன் இருக்கிறான்.
சங்கரன் எனும் சிவலிங்கத்தில் விந்து வட்டமாகக் கீழே ஆவுடையாகவும், நாதத்தை மேலே நீள் வட்டமாக லிங்கமாகவும் சித்தர்கள் குறியீடிட்டு காட்டியுள்ளீர்கள்.
விந்துவும் நாதமும் சேர்ந்தது தான் அனைத்து பிரபஞ்சமுமே. இந்தப் பிரபஞ்சமெனும் இறைவன் விந்து நாத வடிவாக இருக்கிறான்.
ஆக இந்த விந்து நாத வடிவான இறைவனை சக்தி சிவம் என்கிறார்கள் சித்தர் பெருமக்கள்.
![]() |
சிவலிங்கம் |
சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாம் சிவஞ் சத தியுமாகஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே
திருமந்திரம் பாடல்: 1772.
பாடலின் விளக்கம்:
"சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி" இந்த உலகமே சக்தி சிவன் விளையாட்டுதான் அதாவது விந்து, நாத விளையாட்டு என்கிறார் திருமூலர், சக்தி என்பது நாதம், சிவன் என்பது விந்து.
"சத்தி சிவமுமாம் சிவஞ் சத தியுமாகஞ்" இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே. .
"சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை" இந்த "சக்தி(நாதம்), சிவம்(விந்து)" தவிர இப்பிரபஞ்சத்தில் வேறில்லை.
"சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே" ஆக "சிவம்=விந்து=வட்டம்=ஆவுடை" இருக்கிறதே இதுதான் வெட்டவெளியான பிரபஞ்சம், இப்பிரபஞ்சத்திற்குள் இருக்கக்கூடிய எல்லாமே "சக்தி=நாதம்=நீள்வட்டம்=லிங்கம்".
![]() |
சிவலிங்கம் |
இந்த விந்து இல்லையென்றால் நாதமில்லை, நாதமில்லையென்றாலும் விந்துயில்லை இந்த இரண்டும் சேர்ந்தது தான் இப்பிரபஞ்சம்.
அதனால் தான் "சிவம் (விந்து) சக்தி (நாதம்)" இதைக் குறீயீடாகக் காண்பிப்பதற்காக (இது மனிதன் கிடையாது, ஆண் பெண் குறி கிடையாது),
இந்தச் சிவலிங்கம் எனும் குறியீடு ஆண்பெண் குறியுனுடைய அமைப்புகளிலிருந்து எடுத்துக் கொண்டார்களே தவிர வேறுவிதமான கற்பனைகளுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை.
இந்த வெட்டவெளியை ஒரு குறியீடாக வைத்தால் வட்டமாகக் குறியீடு வைத்துள்ளார்கள். ஆக அந்த வெட்டவெளியான முதல் முதற்கடவுளான இறைவன் தான் சிவம் அந்தச் சிவத்திற்குள் இருக்கும் எல்லாமே சக்தி இதை நீள்வட்டமாக ஒரு குறியீடாக வைத்துள்ளார்கள்.
![]() |
சிவலிங்கம் |
இதைத்தான் சங்கரன் (சிவலிங்கமாக) காட்டியுள்ளார்கள் இது கடவுள் அல்ல இது குறியீடு எனச் சித்தர் பெருமக்கள் கூறியுள்ளார்கள்.
ஆதி முதலாக இருந்த சிவம் குறியீடாக வரும்போது சங்கரனாகிறார். அந்தச் சங்கரனாக வரும் குறியீடு லிங்கமாகவும் ஆவுடையாகவும் வருகிறது.
இந்தப் பிரபஞ்சத்தையே குறியீடாகக் காண்பித்த பெரிய அறிவியல் வித்தை இது.
இந்த அறிவியல் வித்தை நமது சித்தர் பெருமக்களுக்குத் தான் உள்ளது. நமது சித்தர்களுக்கு ஈடு இணையாக ஒன்றுமேயில்லை. நன்றி
தன்னை தான் அறிந்து கொள்வான்,
தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,
தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக